search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ் மொழிகள்"

    மத்திய அரசின் மனித வளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் தமிழ் உள்பட தென்னக மொழிகள் புறக்கணிப்பு ஏன்? என்று கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார். #veeramani #centralgovernment

    சென்னை:

    திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மத்திய அரசின் மனித வளத்துறை சார்பில் துவங்கப்பட்டுள்ள இணையவழி நூலகத்தில் ஆங்கிலம், இந்தி சமஸ்கிருதம் மட்டுமே இடம்பெற்றுள்ளன! மாநில மொழிகளில் வங்காளம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதில் தென் இந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் கன்னடம் போன்ற மொழிகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

    கரக்பூர் தொழில்நுட்ப நிறுவனம் இந்த நூலகத்தை வடிவமைத்துள்ளது, இந்த நூலகம் மூலம் உலகம் முழுவதிலுமுள்ள பல் கலைக் கழக மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் இந்தியா குறித்தும், இந்திய கலாச்சாரம் குறித்தும் தெரிந்துகொள்ளும் அளவிற்கு அதிக அளவு நூல்கள் இந்த இணையவழி நூலகத்தில் கிடைக்கும். இதுவரை இந்தியாவில் உள்ள 170 கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த, நூல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. 3 லட்சம் எழுத்தாளர்களின் 1 கோடி புத்தகங்கள் இதில் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சமூக அறிவியல், விஞ்ஞானம், மொழி, இலக்கியம், புவியியல், வரலாறு, தொழில் நுட்பம், மதம் போன்ற பலதுறைகளைச் சேர்ந்த புத்தகங்கள் பொருள்வாரியாக இடம்பெற்றுள்ளன. வேத நூல்களின் மூல நூல்கள் அதற்கான பொருள் விளக்கங்களுடன் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் உள்ள பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் சார்பில் சில புத்தகங்களும், புதுச்சேரி பல்கலைக் கழகத்தின் சார்பில் சில நூல்களும் சேர்க்கப்பட்டுள்ளன. ஆண்டாள் பாசுரங்கள் ஆங்கிலத்தில் தனியாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த வரலாற்று நூல்கள், பிரபல எழுத்தாளர்களின் நூல்கள் என எதுவும் இடம் பெறவில்லை. அதே போல் தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களும் இதில் கிடையாது. முக்கியமாக நீங்களும் உங்கள் நூல்களைப் பதிவிடலாம் என்ற இடத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு உள்ளிட்ட தென் இந்திய மொழி நூல்களுக்கு இடமில்லை.

    தென் இந்தியமொழி நூல்களைப் பதிப்பவர்கள் அதன் ஆங்கில அல்லது இந்தி பதிப்பை மட்டுமே பதிவேற்றவேண்டும் என்று குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மத்திய பி.ஜே.பி. அரசு இந்தியா முழுவதற்கும் உள்ள அரசா? அல்லது இந்தி மாநிலங்களுக்கு மட்டும் உள்ள அரசா? சமஸ்கிருதம் என்ற செத்தொழிந்த மொழியைச் சிம்மாசனம் ஏற்றுவதிலேயே குறியாக இருப்பது மத்திய பி.ஜே.பி. அரசின் பார்ப்பனிய சமஸ்கிருத ஆதிக்க உணர்வின் வெளிப்பாடே!

    இதுகுறித்து தமிழக முதலமைச்சரும், தென் மாநில முதலமைச்சர்களும் மத்திய அரசுக்கு எழுதிடவேண்டும். தமிழ்நாட்டில் சட்டப்பேரவை நடந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் எதிர்க்கட்சியினர் இந்தப் பிரச்சினையை எழுப்பிட வேண்டும். இதில் கட்சி வேறுபாடுகளுக்கு இடமில்லை.

    மத்திய அரசின் ஒவ்வொரு செயல்பாடுமே வெகு மக்கள் விரோத குறிப்பாக, இந்தி பேசாத மக்கள் விரோத போக்குடையதாகவே இருக்கிறது தேவை விழிப்புணர்வே!

    இவ்வாறு கி.வீரமணி கூறியுள்ளார். #veeramani #centralgovernment

    ×